

திருநெல்வேலி: பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்எல்சி இந்தியா நிறுவனம், இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து நடத்திய வினாடி வினா போட்டியின் இறுதி சுற்றுவரை கலந்து கொண்டு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
ஊழலற்ற தேசத்தை வளர்க்கும் வகையில் ‘‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’’ நிகழ்வை முன்னிட்டு என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்து தமிழ் திசைநாளிதழ் இணைந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய4 இடங்களில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை நடத்தின. ஜூனியர் பிரிவில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், சீனியர் பிரிவில் 9 முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றன.
முதல் நிலை வினாடி வினா மதுரையில் நடைபெற்றது. இத னைத் தொடர்ந்து மாநில அளவிலான வினாடி வினா இறுதிப் போட்டி நெய்வேலியில் நடைபெற்றது. இதில், சீனியர் பிரிவில் 9-ம் வகுப்பைச் சேர்ந்த வி.முகேஷ் குமார் மற்றும் ஆர் சரண் ராமும் ஜூனியர் பிரிவில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த ஆர்.ஹரிச்சரண் மற்றும் பி .எஸ். கார்த்திக் லக்ஷ்மணும் அவரவர் பிரிவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.