

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளியில் ரூ.13 கோடியில் 42 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்நிலையில் நேற்று, சென்னைகீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டதோடு, தற்போதைய பள்ளி கட்டிடங்களில் செய்யப்பட வேண்டியசீரமைப்பு பணிகள் குறித்து அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது : கடந்த நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுகின்ற பள்ளிகள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளைக்கு பள்ளி 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 1998-ம்ஆண்டு குத்தகை காலம் முடிந்த பிறகு வாடகைத்தொகை செலுத்தாமல் இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.2021-ம் ஆண்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. அதன்படி பள்ளியை கண்ணன் செட்டி அறக்கட்டளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தது.
தற்போது 1180 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த ஆண்டில் கூடுதலாக 300 மாணவர்கள் புதிதாக சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக ரூ. 13 கோடியில் 42 அறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்படவுள்ளது. அதில் 32 வகுப்பறை கட்டிடங்கள், 4 ஆய்வுக்கூடங்கள், ஒரு நூலகம், 4 ஆசிரியர் அறைகள், ஒரு கணினிஅறை அமைக்கப்படும். தமிழ்நாடுமுழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற 27 பள்ளிகளில் பயின்று வரும் 13,863 மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.