Last Updated : 31 Oct, 2022 06:15 AM

 

Published : 31 Oct 2022 06:15 AM
Last Updated : 31 Oct 2022 06:15 AM

60 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு கடும் தண்டனை: சாகசம் செய்யும் இளைஞர்கள், படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் உஷார்

சென்னை: இரு சக்கர வாகனம், கார், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்போர் மற்றும் பயணம் செய்வோர் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத்துடன், சிறை தண்டனையும் காத்திருக்கிறது.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்படுவதால், போக்குவரத்து விதிமீறல் சர்வசாதாரணமாக நடக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதத் தொகையை கூடுதலாக விதிப்பதுடன், சிறை தண்டனை விதித்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவந்த திருத்தம் தற்போது தமிழகத்திலும் அமலுக்கு வந்துள்ளது.

பெற்றோருக்கு தண்டனை: புதிய போக்குவரத்து சட்ட திருத்தத்தின்படி, 60 வகையான போக்குவரத்து விதிமீறல்களில், முதல்முறை விதிமீறலுக்கு ஒரு அபராதமும், 2-வது முறை விதிமீறலுக்கு கூடுதல் அபராதமும் விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால், ஹெல்மெட் அணியாவிட்டால், காரில் சீட் பெல்ட் போடாவிட்டால் தலா ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். மோட்டார் சைக்கிள், இலகுரக வாகனங்களை வேகமாக இயக்கினால் ரூ.1,000-மும், கனரக வாகனங்களை வேகமாக இயக்கினால் ரூ.2,000-மும் அபராதம் விதிக்கப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 மற்றும் 3 மாதம் சிறை தண்டனை, இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றாலோ, ஹெல்மெட் அணியாவிட்டாலோ ரூ.1,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.500 அபராதம். இப்போது ரூ.5,000. செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினால் முதல் தடவை ரூ.1,000 அபராதம். 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோருக்கு தண்டனை. அத்துடன் அந்த வாகனப் பதிவை ரத்து செய்து, 3 ஆண்டுகள்வரை சிறைதண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் ரூ.10 ,000 அபராதத் தொகையில் மாற்றமில்லை. வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000, பதிவு இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,500, ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10,000, சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம், வாகன சாகசத்தில் ஈடுபட்டால் முதல் தடவை ரூ.5,000, 2-வது தடவை ரூ.10,000 அபாரதம் விதிக்கப்படுகிறது.

படிக்கட்டில் பயணம் செய்யாதே! - டிரைவர், கண்டக்டர் சீருடையில் இல்லாமல் இருந்தால், "நோ பார்க்கிங்"கில் வாகனம் நிறுத்தினால், சரியில்லாத நம்பர் பிளேட்,பக்கவாட்டு கண்ணாடி இல்லாவிட்டால், வாகன உரிமையாளர் பெயர்மாற்றத்தில் குளறுபடி, "வைப்பர்" வேலை செய்யாவிட்டால், முகப்புவிளக்கு மற்றும் ஹார்ன் வேலைசெய்யாவிட்டால், கூடுதல் நபர் அமர்ந்திருந்தால், தவறான நடத்தை,வாகனத்தில் புகைபிடித்தால், வீட்டு முகவரி மாற்றத்தை தெரிவிக்காவிட்டால், முகப்பு விளக்கில் கருப்பு பிலிம் ஒட்டாவிட்டால், படிக்கட்டில் பயணம் செய்தால் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ஒருவழிப் பாதை, நோ என்ட்ரி-யில் வந்தால், நம்பர் பிளேட் இல்லாவிட்டால், போக்குவரத்து காவல் அதிகாரியிடம் ஆவணங்களைக் காண்பிக்க மறுத்தால், பள்ளிக்கூட வாகனங்களில் முதலுதவி பெட்டி இல்லாவிட்டால், பேருந்து உள்ளிட்ட பொது வாகனங்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட 60 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்கள், பேருந்துகளில் படிக்கட்டு, மேல் பகுதி, பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இச்சூழலில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது குறித்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x