Published : 26 Oct 2022 06:08 AM
Last Updated : 26 Oct 2022 06:08 AM

விராட் கோலிக்கு ஆஸி. வீரர் புகழாரம்: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி

மெல்பர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை வெற்றி பெறச் செய்த விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டியுள்ளார். மெல்பர்னில் நடைபெற்ற சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

31 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது. அப்போது 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். குறிப்பாக விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடையிலான போட்டி சிறப்பான ஒன்றாக அமைந்திருந்தது. விராட் கோலி அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை என்றே சொல்லலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாதநம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. இந்த ஆட்டத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. விராட் கோலியின் ஆட்டம் அற்புதமானதாக இருந்தது. இதற்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மிட்செல் மார்ஷ்

விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது.12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இதுபோன்ற மேலும் பல இன்னிங்ஸ்களை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதைப் போலவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் உள்ளிட்டோரும் விராட் கோலிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இன்சமாம் உல் ஹக் கூறியதாவது: களத்தில் விராட் கோலி பேட்டிங்செய்து கொண்டிருந்தால் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரது இந்த ஆட்டத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. மேலும் அதை பாராட்டுவதற்கு வார்த்தைகளை தேடுவதும் கடினம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். கிரிக்கெட் அரங்கில் ஆபத்தான பல பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால், விராட் கோலி அவர்கள் அனைவரையும் விடவும் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெற்றி பெறும் என்றால் அது விராட் கோலியின் பங்களிப்பில்தான் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமீப காலமாகவே கோலி தனது மிகச் சிறப்பான ஆட்டத்துக்கு திரும்பியுள்ளார். அவர் இப்படியே விளையாடினால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோரும் விராட் கோலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x