

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டிஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் (பிவிஎஸ்சி) 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் (63 இடங்கள்) ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்துக்குரிய இடங்கள் 517 ஆகும்.
திருவள்ளூர் மாவட்டம் கொடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்) படிப்பில் 40 இடங்கள், பிடெக். (பால்வள தொழில்நுட்பம்) படிப்பில் 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் (6) போக, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வழங்கப்படும் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிவிஎஸ்சி, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 12-ம்தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பிவிஎஸ்சி படிப்புக்கு 13,470 பேரும், பிடெக் படிப்புக்கு 2,744 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல் https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி, கால்நடை மருத்துவம்மற்றும் பராமரிப்பு இடங்களுக்குபொதுப்பிரிவில் விண்ணப்பித்தவர்களில் 12,909 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பிவிஎஸ்சி படிப்பில் முதல் 3 இடங்களை பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்திரசேகர், ஈரோடு மாவட்டம் முத்துபாண்டி, தருமபுரி மாவட்டம் ஹரினிகா ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிடெக் படிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் சுபா கீதா 200-க்கு 199.500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்டம் அஸ்வின், திருச்சி மாவட்டம் ஷாஜீகா ஆகியோர் 200-க்கு 198 மதிபெண்கள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 1,837 மாணவ-மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இதில் சேலம் மாவட்டம் வர்ஷா, தருமபுரி மாவட்டம் சக்திவேல், விழுப்புரம் மாவட்டம் மகாலட்சுமி ஆகியோர் 200-க்கு 196.500 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கான கந்தாய்வு வருகிற 29-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக 29-ம் தேதி நடக்கிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு: அதைத்தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29 முதல் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மற்றும் சிறப்பு பிரிவில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 2-ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.