

அன்பு பிள்ளைகளே, பழமையான பழமொழிகளை சரியாக விளக்கம் தெரியாமல் நாம் பெரும்பாலும் பயன்படுத்து கிறோம், சரியாக சொல்வதில்லை, இந்த பகுதியில் அதன் உண்மை அர்த்தத்தையும் உங்களுக்கு கூறிடவா... அதன் மூலம் சரியாக சொல்லிப் பழகலாமே சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி என்ற பழமொழி, ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, கெட்ட எண்ணம் கொண்ட ஒருவர் ஊடே புகுந்து காரியத்தைக் கெடுத்துவிடுவதைக் குறிப்பதைப் போல் உள்ளது.
நாம் ஏதாவது முக்கியமான வேலையாக அல்லது ரகசியமாக ஏதேனும் முற்படுகையில் யாராவது வந்து அத்தகைய வேலை தடையானால், நாம் உடனே சிவ பூஜையில் கரடி மாதிரி வந்துட்டாங்க என்று குறைபட்டுக் கொள்வோம்; சில நேரம் வந்தவரிடமே சொல்வோம். அதனால் அவருக்கும் மன வேதனை உண்டாகும். ஆனால் இதன் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இதற்குள் ஓர் ஆன்மிகச் செய்தி அடங்கியுள்ளது. முன்பெல்லாம் சிவாலயங்களில் பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும். அபிஷேகம் நடக்கும்போதும், அலங்காரம் நடக்கும்போதும், உற்சவர் உலாவரும் போதும் இவை இசைக்கப்படும்.
இப்போதும் தவில், நாதஸ்வரம் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றுதான் ‘கரடிகை' என்பது. சுவாமிக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டப்படும்போது இந்தக் கருவி இசைக்கப்படும். மற்ற நேரங்களில் வேறு வேறு கவனத்தில் இருந்த பக்தர்கள், இந்த இசையைக் கேட்டவுடன் தீபாராதனையை சுவாமியை தரிசிக்க ஆயத்தமாகிவிடுவார்கள். கரடிகை என்ற வாத்தியம்தான் பழமொழியில் கரடி என்று மாறி விட்டது. சிவபூஜையில் கரடிகை என்றே சொல்வோம். இனி யாரையும் கரடி என்று சொல்லாமல், உண்மையை உணர்வோம். சரியாகச் சொல்லிப் பழகலாமே! சொல்லி பழகுவோமா இன்னும் இப்படி நிறைய உண்டு. தொடர்ந்து பார்ப்போம்.
அன்பாய் வாழ்வோம்.
கட்டுரையாளர்
ரம்யா ஜெயக்குமார்
கருவேலி, திருவாரூர் மாவட்டம்.