Published : 10 Oct 2022 06:02 AM
Last Updated : 10 Oct 2022 06:02 AM
கோவை: கோவை மாநகரில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த ‘ஆட்டோ நூலகம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணிக்கும் பொதுமக்களும், சவாரி இல்லாத நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்களும் வாசிப்பதற்காகவும், அவர்களின்வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காகவும் ‘லைப்ரரி ஆன் வீல்ஸ் வித் ஆட்டோ தம்பி’ என்ற பெயரில் ஆட்டோ நூலகம் திட்டத்தை கோவைமாநகர காவல் ஆணையர்வே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், ஆட்டோவில் ஏறி நூலை படித்தவாறு சிறிது தூரம் அவர் பயணித்தார். மேலும், புத்தக தானம் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஓய்வு நேரத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பயனுள்ளதாக கழிப்பதற்கும், பயணநேரத்தை பொதுமக்கள் பயனுள்ளதாக கழிப்பதற்கும் இத்திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. கலாம்ஃபவுண்டேஷனுடன் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆட்டோவில் புத்தகங்கள், செய்தித்தாள்கள் ஆகியவை இருக்கும். கோவை நகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மனிதர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதில் புத்தகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல்துறையின் சார்பில் வீதி தோறும் நூலகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாடகைக் கார்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றார். கலாம் ஃபவுண்டேஷன் நிர்வாகஅறங்காவல் கிஷோர்சந்திரன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT