Published : 10 Oct 2022 06:04 AM
Last Updated : 10 Oct 2022 06:04 AM

கல்வி நிறுவனங்கள், போட்டித் தேர்வுகளுக்கு இந்தி மொழி கட்டாயமாக்கப்படும்: அமித்ஷா பரிந்துரை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய வாரிய பள்ளிகளான கேந்திரிய வித்தியாலயா, நவோதயா வித்தியாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும், போட்டித் தேர்வுகளிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தி மொழியை நாட்டின் ஒரே அலுவல் மொழியாக்கும் முயற்சிக்கும், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்வித்திட்டத்தில் இந்தியை கட்டாயமாக்கும் திட்டத்துக்கும் தமிழகம் நெடுங்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் சமீபத்திய பரிந்துரையில் கூறப்பட்டிருப்பதாவது: கல்வி நிலையங்களில் தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே இனி ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். ஆங்கில வழி கல்வியை இந்தி வழிகல்வியாக மாற்ற வேண்டும். தொழில்நுட்ப கல்வி, தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆங்கிலம் மாற்று மொழியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள மத்திய வாரிய பள்ளிகளான கேந்திரிய வித்தியாலயா, நவோதயா வித்தியாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். இந்தி மொழியை கட்டாயமாக்காவிட்டால் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இந்தி வழிக் கல்வியை உறுதி செய்தால் மட்டுமே அதை அனைத்து மாநிலங்களிலும் பொதுவான மொழியாக ஏற்க முடியும். போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியிலேயே கேள்விகள் இடம் பெறும். இந்தி மொழி தெரியாத அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x