Published : 30 Sep 2022 06:25 AM
Last Updated : 30 Sep 2022 06:25 AM

ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக்கை கருத்தில் கொண்டு சீரான திறனை வெளிப்படுத்துவதே இலக்கு: மனம் திறக்கும் இளவேனில் வாலறிவன்

அகமதாபாத்: அடுத்த ஆண்டு நடைபெற ஆசிய விளையாட்டு மற்றும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த இரு தொடர்களுக்கும் இடையே நடைபெறும் போட்டிகளில் சீரான திறனை வெளிப்படுத்துவதையே இலக்காக கொண்டுள்ளதாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார்.

பதக்கம் வெல்லக்கூடிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இளவேனில் வாலறிவன் கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெறுங்கையுடன் திரும்பினார். இந்தியாவின் தலைசிறந்த ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான 23 வயதான இளவேனில் அடுத்த மாதம் எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்தத் தொடருக்கு முன்னதாக தேசிய விளையாட்டு போட்டியிலும் இளவேனில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் அவர் கூறியதாவது:

எகிப்தின் கெய்ரோ நகரில் வரும்12-ம் தேதி தொடங்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். இந்தத்தொடருக்காக கடினமாக பயிற்சிகள்மேற்கொண்டுள்ளேன். நிலைத்தன்மையான செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கும், 2024-ம்ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இது முக்கியமானது.

நம்மிடம் சில சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர்கள் உள்ளனர். தேசிய சாம்பியன்ஷிப், தேசிய விளையாட்டு போட்டிகள் போன்ற தொடர்கள் சிறப்பானவை. இந்த போட்டிகள் நாங்கள் முன்னேற்றம் காணவும், சர்வதேச போட்டிகளுக்கு முன்னதாக சிறந்த பார்மை கண்டறியவும் உதவுகின்றன. எனது அறிமுக தேசிய விளையாட்டு போட்டியை சொந்த இடத்தில் விளையாடுகிறேன். இது மிகுந்த உற்சாகமாக உள்ளது. சொந்த பகுதி மக்களின் முன்பு போட்டியில் பங்கேற்பது வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளூர் துப்பாக்கி சுடும் வீரர்களை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வகையில் நல்ல மனநிலையில் இருக்க விரும்புகிறேன். ககன் நரங்தான் எனக்கு முன்மாதிரியாக உள்ளார். அவருடைய சாதனைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். நிதானமாக செயல்படும் அவருடைய குணாதிசயங்கள் பிடிக்கும். எந்த ஒரு வீரருக்கும் இது முக்கியமானது. எப்போதும் அவர், எங்களை நிதானமாக இருக்கக்கூறுவார். இறுக்கமான சூழ்நிலைகளில் மனஉறுதி மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகளாக நான், எனது தவறுகளில் இருந்துகற்றுக்கொண்டுள்ளேன். தன்னம்பிக்கையும் மற்றொரு முக்கிய காரணியாகும். இவ்வாறு இளவேனில் வாலறிவன் கூறினார்.

2018-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் இளவேனில் வெள்ளிப் பதக்கம் வென்று துப்பாக்கி சுடுதலில் தனது இருப்பை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தார். தொடர்ந்து பிரேசிலில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இதன் மூலம் 33 வருடகால வரலாற்றில் தங்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் இளவேனில் படைத்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x