Published : 30 Sep 2022 06:23 AM
Last Updated : 30 Sep 2022 06:23 AM
லாகூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. அறிமுக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அமீர் ஜமால் கடைசி ஓவரை அற்புதமாக வீசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
லாகூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் ரிஸ்வானின் 4-வது அரை சதமாக இது அமைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். டேவிட் வில்லி, சேம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
146 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. ஃபில் சால்ட் 3, அலெக்ஸ் ஹேல்ஸ் 1, டேவிட் மலான் 36, பென் டக்கெட் 10, ஹாரி புரூக் 4, சேம் கரண் 17, கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தது. கேப்டன் மொயின் அலி, டேவிட் வில்லி களத்தில் இருந்தனர். அறிமுக ஆல்ரவுண்டரான அமீர் ஜமால் வீசிய இந்த ஓவரில் ரன்கள் சேர்க்க மொயின் அலி தடுமாறினார்.
முதல் 2 பந்துகளை வீணடித்த அவர், 3-வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார். 4-வது பந்தையும் மொயின் அலி வீணடிக்க அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடினார். கடைசி பந்தில் டேவிட் வில்லி ரன் ஏதும் எடுக்கவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மொயின் அலி 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 7 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 3-2 என முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது இது 2-வது முறையாகும். 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இரு அணிகள் மோதும் 6-வது டி 20 ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT