

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிஸாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது.
ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிஸாவின் புவனேஷ்வர், ரூா்கேலாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறுகின்றன.
உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. ரூா்கேலாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிா்ஸா முண்டா மைதானத்தில் ஜனவரி 13-ல் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது இந்திய அணி. தரவரிசையில் 8-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.
அதன்பின் 15-ம் தேதி தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா. காமன்வெல்த் போட்டிகளில் இரு அணிகளும் மோதிய பரபரப்பான ஆட்டம் 4-4 என டிராவில் முடிவடைந்தது. தனது கடைசி குரூப் ஆட்டத்தில் 19-ம் தேதி புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் வேல்ஸ் அணியுடன் ஆடுகிறது இந்தியா.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 44 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. குரூப் பிரிவுகளில் முதலிடத்தைப் பெறும் 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2, 3-வது இடங்களைப் பெறும் அணிகள், கிராஸ் ஓவா் ஆட்டங்கள் மூலம் மீதமுள்ள 4 காலிறுதி இடங்களுக்கு தகுதி பெறும்.
குரூப் பி-ல் நடப்புச் சாம்பியன் பெல்ஜியம், முன்னாள் சாம்பியன் ஜொ்மனியுடன் இடம் பெற்றுள்ளது. ஜனவரி 17-ல் இரு அணிகளும் மோதுகின்றன. உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியா குரூப் ஏ பிரிவில் ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் ஜனவரி 16-ல் மோதுகிறது.
கடந்த 2018 உலகக் கோப்பையில் இந்திய அணி காலிறுதியில் நெதா்லாந்திடம் 2-1 என போராடி தோற்றது. கடந்த 1975-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதன் பின் பட்டம் வெல்லவில்லை. பாகிஸ்தான் அணி இம்முறை உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும்.