Published : 28 Sep 2022 06:06 AM
Last Updated : 28 Sep 2022 06:06 AM
சென்னை: திருச்சி மாவட்டத்தில் உள்ள புராதன சின்னங்கள், கட்டிடங்களை மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி, கூட்ட அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை சார்பில் திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் ரூ.4.17 கோடியில் கட்டப்பட்டுள்ள தங்கும் வி்டுதி மற்றும் கூட்ட அரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா கட்டிடம் உள்ளிட்டவற்றை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில், இயற்கை எழில் கொஞ்சும் பச்சமலை, புளியஞ்சோலை, முக்கொம்பு போன்ற சுற்றுலா தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.
ஆண்டுதோறும் இம்மாவட்டத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழ்நாடு ஓட்டலில் 19,238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 பேர் இருக்கை வசதி கொண்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வரலாற்று நினைவிடங்கள், சிறப்பு மிக்க கட்டிடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், போர்ச்சுகீசியர்கள் வணிகம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி கொண்ட வள்ளலார் பிறந்த வடலூர் போன்ற ஊர்களுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலாவளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் புதிய சுற்றுலாஅலுவலகம் சிதம்பரம் நகரில் கட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT