Published : 28 Sep 2022 06:06 AM
Last Updated : 28 Sep 2022 06:06 AM
சென்னை: தமிழக அரசின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 முதல் 2027 வரை 5 ஆண்டு காலத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவு மற்றும்எண்ணறிவு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கற்போர் மற்றும் தன்னார்வ ஆசிரியர்களை கண்டறிவதற்கும், கற்றல் மையம் அமைப்பதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து கூறியிருப்பதாவது:
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு: 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும்எழுத மற்றும் படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குவது இத்திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இதனை நிறைவேற்ற பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை அந்ததந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கண்டறிய வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரின் உதவியுடன் குடியிருப்பு பகுதியில் கற்றலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணிகளை அவர்கள் நடத்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்ட பதிவேடு, மகளிர் சுய உதவிக்குழு பதிவேடு, குடும்ப விவர கணக்கெடுப்பு பதிவேடு உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கள ஆய்வு நடத்தி தகவல்களை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்து, பள்ளியைச் சார்ந்த குடியிருப்பு பகுதியில் உள்ள 10-ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி உடைய, கற்பித்தலில் ஆர்வமும் சேவை மனப்பான்மையும் கொண்ட நபர்களைகண்டறிந்து தன்னார்வலர் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இந்ததன்னார்வலர் குழுவில் பெற்றோர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், இல்லம் தேடிகல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்படலாம். தேர்வுசெய்யப்படும் தன்னார்வலர் ஆசிரியர்கள் திட்டக் காலம் முடியும் வரை (ஆறு மாதம்) தொடர்ந்து பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு பள்ளியில் குடியிருப்பு பகுதியில் முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் இருக்கும் பட்சத்தில் அப்பள்ளியே கட்டாயம் கற்போர் மையமாக செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் நூறு நாள் வேலைத்திட்டப் பகுதிகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் கற்றல் கற்பித்தல் மையமாக பயன்படுத்த வேண்டும். பள்ளி வேலை நாட்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் வீதம் ஆறு மாதத்தில் 200 மணி நேரம் கற்றல் கற்பித்தல் பணி கட்டாயம் நடைபெற வேண்டும்.
கதை, பாடல் மூலம் தன்னம்பிக்கை: தினசரி பாடத்திட்ட அட்டவணைப்படி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும். குறிப்பாக கதைகள், மனதுக்கு உற்சாகம் தரும் பாடல்கள் மூலம் கற்போருக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். நூறு சதவீத வருகை பதிவை கற்போரும் தன்னார்வலர் ஆசிரியர்களும் உறுதி செய்ய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் உற்று நோக்க வேண்டும். பள்ளிக்கூடங்களையும் கற்றல் கற்பித்தல் நடைபெறக்கூடிய பகுதிகளையும் ஆசிரியர்கள் பார்வையிட வேண்டும். கற்போர் அனைவரும் பயிற்சியின் இறுதியில் நடைபெறும் மதிப்பீட்டுத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதி ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படும் கற்போர் மைய செயல்பாடுகளையும் தன்னார்வலர் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல்செயல்பாடுகளையும் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT