Published : 27 Sep 2022 06:20 AM
Last Updated : 27 Sep 2022 06:20 AM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4-வது டி 20-ல் இங்கிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி முதன்முறையாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 7 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 4-வது ஆட்டம் கராச்சியில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. முகமது ரிஸ்வான் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசினார். பாபர் அஸம் 36, ஷான் மசூத் 21 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லே 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

167 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. ஃபில் சால்ட் 8, அலெக் ஹேல்ஸ் 5, வில் ஜேக்ஸ் 0, பென் டக்கெட் 33, ஹாரி புரூக் 34, மொயின் அலி 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். கைவசம் 3 விக்கெட்கள் இருந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 9 ரன்களே தேவையாக இருந்தது.

இதனால் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை வீசிய ஹரிஸ் ரவூப் முதல் இரு பந்துகளில் 4 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் அடுத்த இரு பந்துகளில் லியாம் டாவ்சன் (34), ஆலி ஸ்டோன் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் பரபரப்பு அதிகமானது. எஞ்சிய இரு பந்துகளிலும் ஹரிஸ் ரவூப் மேற்கொண்டு ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

முகமது வாசிம் வீசிய கடைசி ஒவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ரீஸ் டாப்லே, ஆதில் ரஷித் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் டாப்லே ரன் எடுக்காத நிலையில் அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார். ஆனால் ஷான் மசூத் விரைவாக பந்தை எடுத்து ஸ்டெம்பை பதம் பார்க்க இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

ஆதில் ரஷித் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ், ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. 5-வது ஆட்டம் லாகூரில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x