Published : 22 Sep 2022 06:16 AM
Last Updated : 22 Sep 2022 06:16 AM

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடர்: அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு

அர்ஜூன் எரிகைசி - பிரக்ஞானந்தா

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது தொடராக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ், கார்ல்சன், இந்திய வீரர்களான பிரக் ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உட்பட 16 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். இதில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

8 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்டத்தில் இருவரும் பின்னடைவை சந்தித்தனர். அதேவேளையில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 25 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

3-வது நாள் ஆட்டத்தை 19 வயதான அர்ஜூன் எரிகைசி வெற்றியுடனே தொடங்கினார். அவர், தனது9-வது சுற்றில் உக்ரைனின் வாசில் இவான்சுக்கை வீழ்த்தினார். தொடர்ந்து 10-வது சுற்றில் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவிடம் தோல்வியடைந்தார். 11-வது சுற்றில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்ட்டுக்கு எதிரானஆட்டத்தை டிரா செய்த அர்ஜூன் எரிகைசி, அடுத்த சுற்றில் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யோவை வீழ்த்தினார்.

17-வது வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 4 சுற்றுகளையும் டிராவில் முடித்தார். 9-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த அதிபனுக்கு எதிராக ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா. தொடர்ந்து வியட்நாமின் குவாங் லீம் லி, செக்குடியரசின் டேவிட் நவரா மற்றும் அமெரிக்காவின் ஹன்ஸ் நீமன் ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களையும் டிராவில் முடித்தார்.

உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 3 ஆட்டங்களில் வெற்றியையும், ஒரு ஆட்டத்தை டிராவிலும் முடித்து அசத்தினார். இவான் சாரிக், டூடா, போரிஸ் கெல்ஃபாண்ட் ஆகியோருக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்தார் கார்ல்சன். இதன் மூலம் 12 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 25 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 24 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 19 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வியட்நாமின் குவாங் லீம் லி 20 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தத் தொடரில் இன்னும் 3 சுற்றுகள் மீதம் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x