Published : 20 Sep 2022 06:20 AM
Last Updated : 20 Sep 2022 06:20 AM

நீதி அமைப்புகளே ஜனநாயகத்தின் பலம்: குடியரசு துணைத் தலைவர் கருத்து

ஜபல்பூர்: நீதி அமைப்புகளே ஜனநாயக்தின் பலம் என்றும் வலுவான, நியாயமான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்புகள் ஜனநாயக மதிப்புகளுக்கு வலுவூட்டும் எனவும் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா நினைவாக ஜபல்பூரில் நீதி அமைப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கலந்து கொண்டார். கருத்தரங்கில் ஜகதீப் தன்கர் பேசியதாவது:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. நீதி அமைப்புகள் நமது ஜனநாயகத்தின் பலமாக விளங்குகின்றன. வலுவான, நியாயமான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்புகளே ஜனநாயகத்துக்கு வலிமையை ஏற்படுத்துவதோடு, வளமையான ஜனநாயக மதிப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

நமது சட்டங்கள் இந்திய குடிமகன்கள் அனைவரையும் சமமாகவே பார்க்கிறது. சட்டத்துக்கு மேலானவா்கள் என்று யாருமில்லை. சட்டத்தின் முன் எல்லாரும் சமம். இதை நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும். அதிகாரத்தில் இருப்பவா்களும், உயா் பதவிகளில் இருப்பவா்களும் இதனைக் கருத்தில்கொண்டு, ஜனநாயக மதிப்புகளை அதிகரிக்கும் வகையில் பொது நலனுடன் செயல்பட வேண்டும்.

நீதிபதி ஜெ.எஸ். வர்மா போன்றவர்கள் நீதித்துறையைின் மூலம் ஜன நாயக மாண்புகளை உறுதிப்படுத்தினர். மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வழங்கிய நீதிமன்ற தீா்ப்புகளுக்காகவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் வகையில் அரசை மாற்றியமைத்ததற்காகவும் நீதிபதி ஜே.எஸ்.வா்மா நினைவுக்கூரப்படுவாா். அவா் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழங்கிய பல்வேறு தீா்ப்புகள் சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை விசாகா வழக்கின் தீா்ப்பின் மூலம் அவர் வடிவமைத்தாா்.

சமூகத்தில் குறிப்பாக, சாதாரண அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவும் காலதாமதம் இல்லாமல் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். சாதாரண மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். எந்த ஒரு வழக்கிலும் பொது நலனே முக்கியம். இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x