

உதகை: உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மிதவை தளம் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் பேர் படகு சவாரி செய்கின்றனர். தற்போது, மோட்டார், மிதிபடகு, துடுப்பு என, 140 படகுகள் இயக்கப்படுகின்றன.
2-வது சீசன் தொடக்கம்
தற்போது, இரண்டாவது ‘சீசன்'தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. உதகை படகு இல்லஏரியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்படகு சவாரி செய்து மகிழ்கின் றனர். வார இறுதியில் தினமும், 15 முதல், 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொள்ள கரையை ஒட்டியுள்ள நடைபாதையில் நடந்து சென்று படகில் ஏறி செல்வது வழக்கம். பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்வதால் சிரமப்படுகின்றனர். இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், முதல் முறையாக அங்கு மிதவை தளம் அமைக்கப்பட்டுள்ளது.