Published : 08 Sep 2022 06:06 AM
Last Updated : 08 Sep 2022 06:06 AM

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் தேசிய ஹோட்டல் மேலாண்மை கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க கல்விக்கடன்: தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் சென்னையில் உள்ள தேசிய ஹோட்டல் மேலாண்மை கல்லூரியில் படிக்க கல்விக்கடன் வழங்கப்படும் என தமிழக அரசின்தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தாட்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்ப நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.

மேலும் சர்வதேசஅங்கீகாரம் பெற்றது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் பிஎஸ்சி (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை) படிப்பும் (3 ஆண்டுகள்), உணவு தயாரிப்பு டிப்ளமா படிப்பும் (ஒன்றரை ஆண்டுகள்) படிக்கலாம். அதேபோல், 10-ம் வகுப்பு முடித்தவர்கள் உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் படிப்பில் (ஒன்றரை ஆண்டுகள்) சேரலாம். விண்ணப்பதாரரின் வயது 28-க்குள் இருக்க வேண்டும்.

படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட தாட்கோ ஏற்பாடு செய்யும். ஆரம்ப நிலையில் மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் பெறமுடியும்.

தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் படிப்பதற்கான கல்விகட்டண தொகையை தாட்கோ நிறுவனமே கல்விக்கடனாக வழங்கும்.

மேற்கூறப்பட்ட பட்ட மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர விரும்பும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் செப்டம்பர் 14-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x