

திருச்சி: மாணவர்களின் நலனில் பெற்றோரைக் காட்டிலும் அக்கறை செலுத்துபவர்கள் ஆசிரியர்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 182 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.25 லட்சம் மதிப்புள்ள இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
ஒவ்வொரு ஆசிரியரும் பாதி பெற்றோராகவும், ஒவ்வொரு பெற்றோரும் பாதி ஆசிரியராகவும் இருந்து மாணவர்களின் திறமைகளைக் கண்டறிய வேண்டும். ஆசிரியர்கள் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குள் வரும்போது வெற்றுக் காகிதம் தான், அவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு பள்ளியிலிருந்து வெளியே செல்லும் போது உலகமே படிக்கும் புத்தகமாக மாற்றக்கூடிய ஆற்றல் ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது. மாணவர்களின் நலனில் பெற்றோரைக் காட்டிலும் அதிக அக்கறை செலுத்துபவர்கள் ஆசிரியர்கள்தான்.
அந்தவகையில், ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏணிப் படியாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவர்கள் தங்கள் மீதுள்ள அக்கறையால்தான் என்பதை உணர வேண்டும். மாணவர்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்லும் இரண்டாவது பெற்றோராக விளங்கும் ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும்.