Published : 29 Aug 2022 06:08 AM
Last Updated : 29 Aug 2022 06:08 AM

புதுச்சேரி பள்ளிகளில் முட்டை வழங்காதது ஏன்? - சட்டப்பேரவையில் ருசிகரம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ பேசுகையில், "புதுவை மாநிலத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 23-ல் நடப்பு கல்வியாண்டு திறக்கப்பட்டன. அரசுபள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்தில் இரு முட்டைகள் சத்துணவுடன் தருவது வழக்கம்.

நடப்பு கல்வியாண்டில் முட்டை தரப்படவில்லை" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம், "டெண்டர் சிக்கலை சரிசெய்து வழங்குவோம்" என்றார்.

முட்டை வழங்காதது ஏன் என்றுஅரசு அதிகாரிகள் கூறுகையில், "முட்டை கொள்முதல் பெற இ-டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது, 12 ஆண்டுகளாக ஒப்பந்தம் பெற்றவர்கள் இ-டெண்டரில் கலந்து கொள்ள முடியாமல் போனது. முட்டை இதுவரை கொள்முதல் செய்யவில்லை.

இதனால் புதுவையில் 53ஆயிரம், காரைக்காலில் 28ஆயிரம், மாஹேவில் 3 ஆயிரத்து500, ஏனாமில் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் உட்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 89 ஆயிரம் ஏழை, எளிய மாணவர்கள் முட்டையில்லாமல் மதிய உணவு பெற்று வருகின்றனர்.

டெண்டர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ-டெண்டர் முறையா அல்லது பழைய நடைமுறையில் லிமிட்டெட் டெண்டர் அடிப்படையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் முட்டை கொள்முதல் செய்யலாமா என்று முடிவு எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x