

விருதுநகர்: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
பள்ளிகளில் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் முழுமையாக வந்துவிட்டதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இலவச சைக்கிள்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. இன்னும் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் சேதமடைந்த வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதில், இந்த ஆண்டு மட்டும் ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,031 இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
மேலும், 2,500 பள்ளிகள் மரத்தடியில் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் தொகுதி நிதியைக் கொண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை தவறாமல் நடத்த வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் அதிக அளவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் இதுவரை 54 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். அரசு திட்டங்களான ‘இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து இடைநிற்றல் இல்லா மாநிலமாக உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் தூய்மைப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் இருக்க வேண்டும். இன்று நாம் எடுக்கும் முயற்சி 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்பு சிறந்த பலனை கொடுக்கும். அது அரசின் மீதான மதிப்பீட்டை அதிகரிக்கும். நாளைய சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்கும் வகையில் நமது பணி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு, அமைச்சர் அளித்த பேட்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மட்டும் டிசம்பரில் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கேற்ப கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அதற்காக 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கநடவடிக்கை எடுத்தோம். ஆனால்,இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.
பள்ளி நூலகம் சென்று புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வாரம் ஒரு முறை புத்தகத்தை படித்துவரும் மாணவர்களுக்கு அதுதொடர்பான கேள்விகள் கேட்டு போட்டிகள் நடத்தப்படும்.
அதில், வெற்றிபெறும் 250 மாணவர்களை மாநில அளவில் தேர்வுசெய்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.500 கோடி, பராமரிப்புக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
மிக விரைவில் அதற்கான தேதியை தமிழக முதல்வர் அறிவிப்பார். நீட் தேர்வுக்கான பயிற்சிவழக்கம்போல் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.