Published : 24 Aug 2022 08:53 AM
Last Updated : 24 Aug 2022 08:53 AM

பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: பேரா. பர்வீன் சுல்தானா அறிவுரை

கோவை ராமநாதபுரம் டிரினிட்டி பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் அறிமுக விழாவில் பங்கேற்ற பேராசிரியர் பர்வீன் சுல்தானாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பள்ளி தாளாளர் ஜோசப் புத்தூர். உடன், பள்ளி முதல்வர் தனலட்சுமி.

கோவை

பள்ளியின் அனைத்து செயல்பாடு களிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பேராசிரியை பர்வீன் சுல்தானா அறிவுரை வழங்கினார்.

கோவை ராமநாதபுரம் டிரினிட்டி மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்ப் பேராசிரியையும் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா பேசியதாவது:

மாணவர்களின் மதிப்பெண்களைக் காட்டிலும் அவர்களின்ஆற்றல், திறமையே முன்னேற்றத்தைக் கொடுக்கும். பெற்றோ ருக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்படிய வேண்டும். பள்ளிப் பருவத்தில் மட்டுமே நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள முடியும்.

மாணவர்கள் எப்போதுமே பள்ளியின் அனைத்து செயல்பாட்டிலும் பங்கேற்க வேண்டும். வெற்றி என்பது நூறு மதிப்பெண் பெறுவதில் மட்டுமில்லை. தோல்விகளில் இருந்து தங்களை நாளுக்கு நாள் மேம்படுத்தி வளர்ச்சிப் பாதையில் செல்வதே வெற்றி.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதில் கருத்துடன் இருக்க வேண்டும். அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். கஷ்ட நஷ்டங்களை எடுத்துரைத்து வளர்க்கவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைக்க வேண்டும்.

இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஜோசப் புத்தூர், முதல்வர் தனலட்சுமி மற்றும் பெற்றோர், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x