

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர், அலவாய்ப்பட்டியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மாணவர்களின் பயன்பாட் டுக்காக மேசை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர்மா.மதிவேந்தன் பங்கேற்று வெண்ணந்தூர் மற்றும் வடுகம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் 200 மேசை, நாற்காலிகள் வழங்கினார். தொடர்ந்து ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் சமுதாயக் கழிப்பிடம், பொன்குறிச்சி ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி என மொத்தம் ரூ.74.35 லட்சம் மதிப்பில் 9 புதிய கட்டுமான பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
மேலும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரா.புதுப்பட்டியில் தலா ரூ.14.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் 2 நியாய விலை கட்டிட கட்டுமானப் பணியை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்து பணியை விரைந்தும், தரமாகவும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.துரைசாமி, ஏ.கே.பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.