Published : 18 Aug 2022 06:02 AM
Last Updated : 18 Aug 2022 06:02 AM

மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு இயக்கம்: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி: பள்ளி மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு இயக்கம் மற்றும் நூலக செயலியை திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு இயக்கம், நூலக செயலி ஆகியவற்றின் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் புத்தக வாசிப்பு இயக்கம், நூலக செயலி ஆகியவற்றை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியதாவது:

ஒரு பள்ளி என்றால் நேராக வகுப்பறைக்குச் சென்று பாடங்களை கவனிப்பது, பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்வது என்பதோடு மாணவர்கள் இருக்கக் கூடாது என்பது தான் தமிழக முதல்வரின் எண்ணம்.

தற்போது மாணவர்கள் பள்ளியில் உள்ள நூலகத்தில் 20 நிமிடங்களாவது செலவிட வேண்டும் என்பது போல் தான் பாடவேளைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்

அறிவுப் பயணம்

‘படிக்கலாம் வெளிநாடு பறக்கலாம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் வாசிப்பை ஊக்கப்படுத்தவே வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் தாங்கள் வாசித்த புத்தகம் தொடர்பான ஓவியம் வரையலாம், விமர்சனம் எழுதலாம், நாடகமாக உரை எழுதலாம், கட்டுரை எழுதலாம்.

குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும்போது, அவர்களை அறியாமல் ஒரு மனமாற்றம் ஏற்படும். புதிய உலகத்தை படைப்போம் என்பது பாடப்புத்தகத்தை படித்தால் மட்டுமே முடியாது, உலக அறிவைப் பெற பாடப் புத்தகங்களை தாண்டி படிக்க வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்கும்போது, நீங்களும் ஒரு படைப்பாளியாக உருவாக முடியும் என்பதால் தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணாநூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக விளங்குகிறது. அந்நூலகத்தை பார்வையிடவும், சிறந்த எழுத்தாளர்களை சந்தித்து உரையாடவும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வாசிப்பு தொடர்பான படைப்புத்திறன் போட்டிகளில் வெற்றிபெறுவோர் வெளிநாடு சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

மாணவ பருவத்தில் மூன்று விஷயங்களில் அதாவது படிப்பு, படிப்பு, படிப்பு என்பதில் தான் கவனம் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுங்கள் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை படித்து, அதன் கருத்துகளை உள்வாங்கினாலே அது அவர்களை நெறிப்படுத்தும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

வாசிப்பு இயக்கம் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் பேசியது: மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாட வேளை வாரம் ஒரு முறை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடவேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி திட்டங்களை தீட்டியுள்ளது.

வாரம் ஒரு புத்தகம்

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 என வகுப்புகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கு நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒரு புத்தகம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திரும்ப அளித்து, அடுத்த நூலை எடுத்துக் கொள்ளலாம்.

படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம், அதை வைத்து ஓவியம், நாடகம், கலந்துரையாடல், நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், ‘புத்தகம் தன் கதை கூறுதல்’ மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் படைப்புகள் பள்ளியில் சேகரித்து வைக்கப்படும்.

இவற்றில் சிறந்த படைப்புகளை சமர்ப்பித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்கப்படுவர். அதில் வெற்றி பெறுவோர் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பப்படுவர். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா3 பேர் என்ற வகையில் மாநிலம்முழுவதும் 114 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்பர். இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும்எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு நந்தகுமார் பேசினார்.

விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரி ரா.பாலமுரளி, மாநகர துணை மேயர் ஜி.திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x