Published : 12 Aug 2022 06:28 AM
Last Updated : 12 Aug 2022 06:28 AM

கால்நடைகள் கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி உதவியாளர் கைது

வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உதவியாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்ட தலைவராக இருப்பவர் அனுப்ரதா மண்டல். இவர் மாநில முதல்வரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர்.

அவரது உதவியாளராகவும் உள்ளவர். வங்கதேச எல்லையில் 2015 முதல் 2017 வரை வங்கதேசத்துக்கு கடத்தப்பட்ட20ஆயிரம் கால்நடைகளின் தலைகைளை எல்லைபாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐஅதிகாரிகள், அனுப்ரதா மண்டல் மீது வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தியது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்ரதா மண்டலுக்கு பலமுறை சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பியும், உடல்நிலையை காரணம் காட்டி அனுப்ரதா மண்டல் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு வரவில்லை.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அனுப்ரதா மண்டல்வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அனுப்ரதா மண்டல் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த தகவல் அறிந்ததும், அங்கு ஏராளமான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அங்கிருந்து அனுப்ரதா மண்டலை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின் அவர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் கூறினர்.

மேற்குவங்கத்தில் சமீபத்தில்தான் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் இருந்து ரூ. 50 கோடி பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து மம்தா நீக்கினார்.

இந்நிலையில், மம்தாவின் உதவியாளர் கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x