CWG 2022 | 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: பதக்கங்களை குவித்து வரும் இந்தியா

CWG 2022 | 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: பதக்கங்களை குவித்து வரும் இந்தியா
Updated on
2 min read

பர்மிங்ஹாம்: 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. மேலும் மகளிர் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணியினர் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் நீடிக்கிறது.

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனில் உள்ளபர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. 4-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்று இருந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற 5-வது நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் அசந்தா சரத் கமல், ஜி.சத்யன் , ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

மகளிர் லான் பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி, பிங்கி சிங் டிர்கே ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் முதல்முறையாக தங்கம் வென்றுவரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

அதேபோல் ஆடவர் பளுதூக்குதல் 96 கிலோபிரிவில் இந்திய வீரர்விகாஸ் தாக்குர் வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றினார்.

பேட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் பி.வி‌.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா, திரிஷா ஜோலி, ஆகர்ஷி காஷ்யப், ஸ்ரீகாந்த் கிடாம்பி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சுமித் ரெட்டி, லக்‌ஷயா சென், சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

இறுதிப் போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது.

முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் யாங்கை வீழ்த்தினார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து காந்த் கிடாம்பி 19-21, 21-6, 16-21 என்ற கணக்கில் தோல்வி கண்டார்.

மேலும், திரிஷா ஜோலி-காயத்ரி ஜோடியும் 18-21, 17-21 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளி மட்டுமே கிடைத்தது.

பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர்நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில் "காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் கலப்புஅணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

திறமை, ஒருங்கிணைந்த செயல்பாடு, போராடும் குணம் வியக்கத்தக்க வகையில் இருந்தது.லான் பவுல்ஸில் தங்கம், டேபிள்டென்னிஸில் தங்கம், பளுதூக்குதலில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்குர் ஆகியோருக்கும் எனதுவாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் அதிகம் போற்றப்படும் விளையாட்டுகளில் பேட்மிண்டனும் ஒன்றாகும். காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் பேட்மிண்டன் விளையாட்டு மேலும் பிரபலம் அடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். 5-ம் நாள் முடிவில் இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in