Published : 02 Aug 2022 06:40 AM
Last Updated : 02 Aug 2022 06:40 AM
லண்டன்: யுஇஎஃப்ஏ மகளிர் யூரோ கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டி லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி, முதல்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
ஆட்டம் தொடங்கும் முன்னரே ஜெர்மனி அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் அலெக்ஸ் பாப், பயிற்சியின்போது காயமடைந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக 2 கோல்களை அடித்திருந்தார் அலெக்ஸ் பாப். இதனால் கேப்டன் இல்லாத ஏமாற்றத்துடன் ஜெர்மனி வீராங்கனைகள் களம் கண்டனர்.
ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை எல்லா டூன் கோலடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து கோலடிக்க ஜெர்மனி வீராங்கனைகள் பெருமுயற்சி செய்தனர். இதற்கு 79-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் நடுகள வீராங்கனை லினா மகுல் கோலடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மாற்று வீராங்கனையாக களமிறங்கிய சிலோ கெல்லி கோலடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் யுஇஎஃப்ஏ மகளிர் யூரோ கோப்பையை இங்கிலாந்து முதன்முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
வெம்ப்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைக் காணஉள்ளூர் ரசிகர்கள் 87,192 பேர் திரண்டிருந்தனர். வெற்றிக்கான கோலை கெல்லி அடித்ததும் இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஸ்டேடியத்தை அதிர வைத்தனர்.
வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் சரினா வீக்மேன் கூறும்போது, “நாங்கள் செய்தது நம்பமுடியாதது. எங்களுக்குப் பின்னால் இங்கிலாந்து இருப்பது எனக்குத் தெரியும். ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதைப் பார்த்தோம். போட்டி முழுவதிலும் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்ததைப் பார்த்தோம். அணிக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT