Published : 02 Aug 2022 06:04 AM
Last Updated : 02 Aug 2022 06:04 AM

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.530 கோடியில் 13 இடங்களில் விளையாட்டு திடல்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.530 கோடியில் 13 இடங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி கட்டிட திட்டங்கள், வீட்டு மனை திட்டங்கள் போன்றவை செயல்படுத்தும்போது ஒதுக்கப்படும் ஏராளமான திறந்தவெளி நிலங்கள் மாநகராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பல தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்தது கண்டறியப்பட்டு, அவைமீட்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட திறந்தவெளி நிலங்கள் குறித்தும்மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுத்துள்ளது.

அவற்றை அப்படியே விட்டுவிட்டால் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் என்பதாலும், மாநகரப்பகுதியில் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்யவும், சிறிது நேரத்தைசெலவிடுவதற்கான இடங்கள் சுருங்கி வருவதாலும் திறந்தவெளி நிலங்களை சிங்காரச் சென்னை2.0 திட்டத்தின் கீழ் விளையாட்டுதிடல்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 13 இடங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி அரங்கத் துறையின் கீழ் 220 விளையாட்டுத் திடல்கள், 203 குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், ஒரு உள் விளையாட்டரங்கம், 3 நீச்சல் குளங்கள், 19 ஸ்கேட்டிங் திடல்கள், 20 பூப்பந்துவிளையாட்டு திடல்கள், 86 திறந்தவெளி இறகு பந்து விளையாட்டு திடல்கள், 52 கைப்பந்து விளையாட்டு மைதானங்கள், 36 கால்பந்து மைதானங்கள், 24 கூடைப்பந்து மைதானங்கள், 3 ஹாக்கி மைதானங்கள், 2 குத்துச்சண்டை மேடைகள், 5 கபடி மைதானங்கள், 5 கிரிக்கெட் மைதானங்கள், ஒரு எறிபந்து மைதானம் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது.

2021-22 நிதியாண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 57 லட்சத்தில் 18 விளையாட்டுத் திடங்கள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு 14 திடல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ரூ.10 கோடியில் நவீன விளையாட்டு திடல் அமைக்கப்பட உள்ளது.

இதுமட்டுமல்லாது நடப்பு நிதியாண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சோழிங்கநல்லூர் மண்டலம் கண்ணகி நகர், வீட்டு வசதி வாரிய சி14 சாலை, எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 5 விளையாட்டு திடல்கள், பழைய வண்ணாரப்பேட்டை காத்படா சாலை, 181-வது வார்டு சுப்பிரமணியம் சாலை, 187-வது வார்டு செந்தூரன் காலனி, 147-வது வார்டு கங்கா நகர், காந்தி சாலை உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள திறந்தவெளி நிலங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.530 கோடியில் திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உடற்பயிற்சி உபகரணங்கள், அமர்வதற்கான இருக்கைகள், சுற்றுச்சுவர்கள் அமைத்தல், மின் விளக்கு வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x