

கோவை புத்தக திருவிழாவில் நேற்று ஒரே இடத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் வாசித்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய புத்தகவிற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றன.
தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டுச் செல்கிறார்கள். தினசரி நூல்கள் வெளியீடு, இலக்கியம், கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சிறப்பு நிகழ்வாக மாணவர்கள் திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் திருக்குறள்வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
400 பள்ளிகளைச் சேர்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் திருக்குறள் வாசித்துள்ளனர். திருக்குறள் என்பது வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷமாகும். சிறப்புபெற்ற திருக்குறளிலிருந்து 20 குறள்களை மாணவர்கள் வாசித்தனர்.ஓர் ஆட்சியாளருக்கு தேவையானஅனைத்து விதமான கருத்துக்களும் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன.
எனவே, அதில் குறிப்பிட்ட மூன்று திருக்குறள்கள் என்னுடைய அலுவலகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளனது. இங்கு வந்த மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, கொடிசியா தலைவர்வி.திருஞானம், கோவை புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணைத்தலைவர் ரமேஷ்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.