Published : 27 Jul 2022 06:04 AM
Last Updated : 27 Jul 2022 06:04 AM
சென்னை: வீடுகளில் செய்யப்படும் செலவுகள் குறித்த கணக்கெடுப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கி ஓராண்டு காலம் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய புள்ளியியல்துறை துணை பொது இயக்குநர் காஞ்சனா கோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக பொருளாதார கணக்கெடுப்பின் கீழ் வீடுகளில் செய்யப்படும் செலவுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதில் ஈடுபட உள்ள களப் பணியாளர்களுக்கான 3 நாட்கள்பயிற்சி முகாம், சென்னையில் நேற்று தொடங்கியது.
தேசியபுள்ளியியல் அலுவலகத்தின் தமிழ்நாடு வடக்கு மண்டலஅலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் 80-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் பங்கேற்ற களப் பணியாளர்கள், ஒரு பகுதியில் குறிப்பிட்ட வீட்டை மட்டும் தேர்வு செய்வர். அங்கு வசிப்போரிடம் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்ட அடிப்படை கேள்விகளுடன், அவர்கள் செய்யும் செலவுகள் குறித்த முழுமையான விவரங்களைத் திரட்டுவார்கள். அதன்படி, உணவு, சேவை (கல்வி,மருத்துவம் போன்றவை), பொருட்கள்(வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும்) என மூன்று பிரிவுகளின்கீழ் கேள்விகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு ஒவ்வொரு வகைக்கும் ஒரு முறை என மூன்று முறை ஒரே வீட்டுக்குச் சென்று பணியாளர்கள் தகவல்களைப் பெறுவர்.
தோராயமான செலவுகள்
இவற்றின் கீழ் கிடைக்கும் பதில்களின் அடிப்படையில், கடந்த 30 நாட்கள் நுகர்வோர் செய்த செலவுகளில் இருந்து, கடந்த ஓராண்டு வரையிலான செலவுகள் குறித்த அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும்.
இதன் மூலம் குறிப்பிட்ட பகுதி மக்களின் தோராயமான செலவுகள் குறித்த விவரங்கள் தரவுகளாக மாற்றப்படும். இத்துடன் மற்ற பகுதி மக்களின் செலவினங்களில் உள்ள வித்தியாசம் போன்றவை கணக்கிடப்படும்.
இந்த கணக்கெடுப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஓராண்டு காலம் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த முகாமின் பார்வையாளரும், தேசிய புள்ளியியல் துறை துணை பொது இயக்குநர் காஞ்சனா கோஷ் பயிற்சி முகாமில் பேசும்போது, "இந்த கணக்கெடுப்பு அரசின் கொள்கை முடிவுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
எனவே அனைவரும் முழு ஈடுபாட்டோடு பணியை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் நலன் கருதி மக்களும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT