

வாஷிங்டன்: இந்தியாவில் 200 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தி செய்துள்ள சாதனைக் காக பிரதமர் மோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மக்களுக்கு 200 கோடி டோஸ்களுக்கும் மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய வரலாற்று சாதனையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவின் இந்த மைல்கல் சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல் கல். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். கரோனா தாக்கத்தைத் தணித்ததற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ள வர்களாக இருக்கிறோம்’ என்று தெரி வித்துள்ளார்.
மோடி கடிதம்
இதனிடையே, நாட்டில் 200 கோடி டோஸ்களுக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்காக, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியே பாராட்டுக் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கோவின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.