Published : 21 Jul 2022 06:04 AM
Last Updated : 21 Jul 2022 06:04 AM

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள்: 80 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு செய்த 80 ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ம் தேதி அன்று வெளியிடப்பட்டன. தேர்வில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சிஅடைந்தனர். பிளஸ் 2 தேர்வை பொருத்தவரை, விடைத்தாள் மதிப்பீட்டில் திருப்தி இல்லாத மாணவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெற்று மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், விடைத்தாள் நகல் பெற்று மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் கணிசமான மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் மதிப்பெண் கூட்டலில் தவறுகள் நடந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள்வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டன.

மேலும், கடந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், மதிப்பீட்டாளர்கள் மதிப்பெண்ணை கணக்கிட்டு வழங்கியதில் குளறுபடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிஇருந்தது. இதையடுத்து நோட்டீஸ் பெற்ற சுமார் 80 ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் இணை இயக்குநர் முன்பு நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது, அவர்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக தெரிகிறது. விடைத்தாள் மதிப்பீட்டை சரிவர செய்யாத ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த தவறை தொடர்ந்து செய்வது கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் குழுவில் இருந்து நீக்கவும் பரிந்துரை செய்யப்படும்.

இதுதொடர்பான விசாரணை முடிந்ததும் சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு தேர்வுத்துறை பரிந்துரை செய்யும். இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் இறுதி முடிவை மேற்கொள்வார் என்று அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாணவரின்வாழ்க்கையிலும் திருப்புமுனையாகஅமைவது பிளஸ் 2 பொதுத்தேர்வுமுடிவுகள்தான். பெற்றோரும் தங்கள்குழந்தைகளின் எதிர்காலத்தை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தீ்ர்மானிக்கிறார்கள். மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பும், எதிர்கால வாழ்க்கையையும் முடிவுசெய்யக்கூடிய இடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஆசிரியர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு விடைத்தாள் திருத்தும்பணியை ஆசிரியர்கள் கவனத்தோடுமேற்கொள்ள வேண்டும். இந்தவிவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களும் அரசும்வரும் கல்வி ஆண்டில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என நம்புவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x