

விருதுநகர்: வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் இந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் என்பது முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத வயது வந்தோர் அனைவரும் புதிய வடிவிலான அறிவுசார் கற்றல் அனுபவங்கள் மற்றும் திறன்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட நிலையான முறையான கற்றல் செயல்பாடுகளைக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கியது.
இக்கல்வி, வயது வந்தோர் அனைவரும் தங்களுக்கென தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதை நோக்கமாக கொண்டது. அவர்களின் கல்வி மற்றும் வருவாய் ஈட்டும் திறனை மேம்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் அவர்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
வயது வந்தோர் கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலும், மாநிலத்தின் எழுத்தறிவின்மையை முற்றிலும் அகற்றிடவும் தமிழக அரசு பல்வேறு வயது வந்தோர் கல்வி திட்டங்களை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 1976-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை தொடக்க விழா விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அமுதவல்லி வரவேற்றார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட இயக்குநர் குப்புசாமி அறிமுகவுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களாக கருதி பணியாற்றி வருகிறோம். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895 கோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். நம் நாட்டில் 1901-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 5 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். 2011-ல்நடந்த கணக்கெடுப்பில் 74 சதவீதம்எழுத்தறிவு பெற்றுள்ளனர். தமிழகத்தில் தற்போது 80.33 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
15 வயதுக்கு மேல் உள்ள, பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3 லட்சத்து10 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.9 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் முறையில் பயிற்றுவிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.