Published : 11 Jul 2022 06:28 AM
Last Updated : 11 Jul 2022 06:28 AM

முரட்டுப் பையன்....

அவனுக்கு வயது ஏழு அல்லது எட்டுதான் இருக்கும். அந்த வயதிலே அவன் மகா முரடனாக இருந்தான். எல்லோருடனும் அடிக்கடிசண்டை போடுவான். சண்டையென்றால் வெறும் வாய்ச் சண்டையல்ல. கைச்சண்டை.

அவன் பணக்கார வீட்டுக் குழந்தையாக இருந்ததால் அவனிடம் ஏராளமான பொம்மைகள் இருந்தன. அந்தப்பொம்மைகளில் மனிதப் பொம்மைகளை எல்லாம் போர் வீரர்களைப்போல் அணிவகுத்து நிறுத்திவைப்பான். பிறகு, டமாரப் பொம்மையை எடுத்து, டம், டம், டம் என்று பல்லைக் கடித்துக் கொண்டு அடிப்பான்.

ஊது குழலால் பலங்கொண்ட மட்டும் ஊதுவான். இவையெல்லாம் எதற்கு?அவன் போருக்கு கிளம்பிவிட்டான் என்பதை அறிவிப்பதற்காகத்தான்...யாருடன் அவன் போர் புரியப்போகிறான்? கூடப்பிறந்த தம்பிகளுடனும், அண்டை வீட்டுப் பிள்ளைகளுடனும்தான்.

இப்படிப்பட்ட முரட்டுப் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தால், அவன் அங்கே போய் ஒழுங்காகப் படிப்பானா? தினமும் மற்ற மாணவர்களுக்கு அவன் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பான். ஆசிரியர்களையும் எதிர்த்துப் பேசுவான்.

இதனால் ஆசிரியர்கள் அவனுக்கு அடிக்கடி தண்டனை கொடுத்து வந்தார்கள். எதற்காக அவர்கள் தண்டனை கொடுக்கிறார்கள் என்பதை அவன் யோசித்துப் பார்ப்பதே இல்லை.வீணாக ஆத்திரப்படுவான். அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று நினைப்பான்.

அந்த ஆசிரியர்களில் ஒருவர் அவனை அடிக்கடி கண்டித்து வந்தார். அவரை எப்படியாவது பழிக்குப்பழி வாங்கிவிட வேண்டும் என்று அவன் கங்கணம் கட்டிக் கொண்டான். தகுந்த சமயத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கிடையில் மகனின் முரட்டுத்தனத்தை அறிந்தார்தந்தை. அவனை ராணுப் பள்ளியில் சேர்த்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்தார். மகனிடம் இதைத் தெரிவித்தார்.

உடனே அவன் நான் தயார். போர் வீரன் ஆகவே நான் விரும்புகிறேன் என்றான். மறுநாளே தந்தை அவனை ராணுவப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு அவன் போர் முறைகளைக் கற்றான். நன்கு தேர்ச்சி பெற்றான். கொஞ்ச காலம் சென்றது. அவனை அடிக்கடி கண்டித்து வந்தாரே, அந்த ஆசிரியரின் ஞாபகம் ஒருநாள் அவனுக்கு வந்துவிட்டது.

உடனே புறப்பட்டு நேராக அந்தப் பள்ளியை நோக்கிச் சென்றான். எதற்காக? அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்கவா? இல்லை, அவரைப் பழிவாங்கத்தான்! ஆனால் அந்த ஆசிரியர் அங்கே இல்லை. எங்கே போய்விட்டார். இறந்துபோய்விட்டார். இதைக் கேட்டதும் அவனுடைய ஆத்திரம் ஏமாற்றமாக மாறியது.

அந்தக் காலத்தில் இப்படிப் போர் வெறி பிடித்து அலைந்த அவன், பிற்காலத்தில் ஒரு பெரிய போர் வீரன் ஆனான். சிறந்த பேச்சாளன் ஆனான். உலகம் அறிந்த ராஜ தந்திரியானான். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தில் பிரதம மந்திரியும் ஆகிவிட்டான்.

பிரிட்டிஷ் பிரதமராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தாரே வின்ஸ்டன்சர்ச்சில், அவர் செய்த திருவிளையாடல்களைப் பற்றித்தான் இவ்வளவு நேரமாக நீங்கள் படித்தீர்கள்.

- குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பாவின் ‘சின்னஞ் சிறு வயதில்’ நூலில் இருந்து.....

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x