Published : 08 Jul 2022 06:24 AM
Last Updated : 08 Jul 2022 06:24 AM

உலகெங்கும் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஐ.நா. அழைப்பு

உலகெங்கும் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் தேவைகளுக்கு உலகளாவிய வளர்ச்சியில் முக்கியத்தும் அளிக்கவும் ஐ.நா. அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நியூயார்க்கில் ஐ.நா. சபையின் உயர்நிலை அரசியல் அமைப்பின் ஆண்டுக்கூட்டம் செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை நடந்தது. இதில் கல்வியாளர்கள், வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, உலகெங்கும் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் அழைப்பு விடுத்தனர். உலகளாவிய அளவிலான வளர்ச்சியில் மாணவர்களின் தேவைகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கரோனா தொற்று காரணமாக உலகமெங்கும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டபோது, 1.6 பில்லியன் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் போய்விட்டது. இதுகுறித்து கல்வியாளர்களும் நிபுணர்களும் வருத்தம் தெரிவித்தனர்.

அவர்களில் 369 மில்லியன் மாணவர்கள் தினசரி ஊட்டச்சத்துக்காக பள்ளி உணவையே நம்பியுள்ளனர் என்றும் மாணவர்களுக்கு தரமான கல்வியும் உணவும் கிடைக்கச் செய்வது உலக நாடுகளின் கடமை என்று கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

கல்வி என்பது சலுகை அல்ல, அது ஒரு வாய்ப்பும் அல்ல, அது மனித உரிமை. அடிப்படை உரிமையான கல்வி எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். மாணவர்களின் தேவைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்தி அவர்களது கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கல்வித் தரத்தை உயர்த்தும் அதேவேளையில் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் வேண்டும். அத்தகைய உயரங்களை அடைய, பள்ளிகள் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமாகவும், கற்றலுக்கான ஊக்கமளிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், கல்வித்துறை பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

தொலைநோக்கு மாற்றங்கள்

இந்த இலக்குகளை அடைவதற்காக நிலையான மேம்பாட்டிற்கான 2030-ம்ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலை முழுமையாக செயல்படுத்த வேண்டும். கரோனா பேரிடருக்கு பிந்தைய கல்விமுறையில் தொலைநோக்கோடு மாற்றங்கள் செய்ய வேண்டும்.

‘கரோனா-விலிருந்து சிறப்பாக மீளக் கட்டியெழுப்புதல்" என்ற கருப்பொருளில், இந்த ஆண்டு கூட்டமானது தரமான கல்வி குறித்த ஆழமான இலக்கு, பாலின சமத்துவம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x