Published : 08 Jul 2022 06:22 AM
Last Updated : 08 Jul 2022 06:22 AM
அகர்தலா: கல்விக்கு வயது தடையில்லை என்பதை திரிபுராவைச் சேர்ந்த 53 வயதான ஷீலா ராணி தாஸ் நிரூபித்தள்ளார். அவர் தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து திரிபுரா இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வில் வெற்றி பெற்றார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்த ஷீலா ராணி தாஸ். சமீபத்தில் தனது 10-ம் வகுப்பு வாரியத்தேர்வை எழுதினார். அவருடன் அவரது மகள்களும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகளை எழுதினர். புதன்கிழமையன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஷீலா ராணிக்கு மும்மடங்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஷீலாராணி தாஸ் 10-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றார். அவரது இரண்டு மகள்களும் 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றனர்.
ஷீலா ராணி தாஸ் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார், சில ஆண்டுகளில் அவரது கணவர் இறந்துவிட்டார், இது அவரதுபடிக்கும் முயற்சியை நிறுத்தியது. குடும்ப பாரத்தை சுமந்த ஷீலா ராணிதாஸ் தனது இரண்டு மகள்களையும் தனியாக நின்று வளர்த்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு மகள்களும் தங்கள் தாயை 10-ம் வகுப்பு வாரியத் தேர்வை எழுதும்படி வற்புறுத்தினர். அதைத் தொடர்ந்து ஷீலா தனது மகள்களின் வழிகாட்டுதலின்படி தேர்வுக்குத் தயாரானார். தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஷீலா ராணி தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் தேர்வில் தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மகள்களும் மற்றவர்களும் என்னை ஆதரித்து, தேர்வு எழுத என்னை ஊக்கப்படுத்தினர். நான் தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT