Published : 07 Jul 2022 06:46 AM
Last Updated : 07 Jul 2022 06:46 AM

வேளாண் கழிவை தொழில்துறை நொதிகளாக மாற்றும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

புதுடெல்லி: குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் வேளாண் கழிவுகளை தொழில்துறை நொதிகளாக மாற்றும் பாக்டீரியாவை, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜவுளி, காகிதம், டிடர்ஜென்ட் சோப்பு, மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்ஃபா-அமைலஸ் (alpha amylase), செல்லுலாஸ் (cellulase) போன்ற தொழில்துறை நொதிகளுக்கு அதிகளவில் கிராக்கி இருந்து வருகிறது.

வேளாண் கழிவுகளில் இருந்துதொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய 'பேசிலஸ் எஸ்பி பிஎம்06' (Bacillus sp PM06) எனப்படும் பாக்டீரியா எவ்வாறு உதவுகிறது என்பதை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐஐடி மெட்ராஸ்-ன் உயிரி தொழில்நுட்பத்துறை ஆசிரியரான பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மடி, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவியான ரேகா ராஜேஷ் ஆகியோர் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற முடிவுகள் புகழ்பெற்ற ஆராய்ச்சிமதிப்பாய்வு இதழான பயோமாஸ் கன்வர்சன் அண்ட் பயோரிஃபைனரி-யில் (Biomass Conversion and Biorefinery) (https://doi.org/10.1007/s13399-022-02418-z) வெளியிடப்பட்டு உள்ளன.

குறைந்த செலவு

ஆராய்ச்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த பேராசிரியர் சத்தியநாராயணா கும்மடி, "குறைந்த செலவில் லிக்னோசெல்லுலோசிக் (lignocellulosic) கழிவுகளை முன்பதப்படுத்துதல் ஏதுமின்றி பிரிக்கும்திறன் கொண்ட உயிரியை நாங்கள் தனிமைப்படுத்தியுள்ளோம்.

இதன் மூலம் நொதிகளின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்சிதை மாற்றங்களுக்காக மேற்கொள்ளப்படும் உயிரிச் செயலாக்கத்திற்கான செலவு குறையும்" என்றார்.

தற்போதுள்ள தொழில்நுட்பத்துடன் இந்த ஆராய்ச்சியை ஒப்பிட்டுப் பேசிய பேராசிரியர் சத்தியநாராயணா என். கும்மடி, "சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்பதப்படுத்துதல், நொதிகளை நீராற்பகுத்தல் (enzyme hydrolysis), நுண்ணுயிரி நொதித்தல் (microbial fermentation) ஆகியவற்றை ஒரே சமயத்தில் மேற்கொள்ளுதல் என்பது உயிரியல் மாற்றத்தில் மிகச்சவாலான அம்சமாகும்.

ஒற்றை நுண்ணுயிரி

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும்விதமாக பல நொதிகளை உருவாக்கும் ஒற்றை நுண்ணுயிரியை தனிமைப்படுத்துவதில் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், கரும்பாலைக் கழிவுகளில் இருந்து புதிய திரிபு ஒன்றைத் தனிமைப்படுத்துவதில் ஐஐடி மெட்ராஸ்ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x