Published : 06 Jul 2022 06:35 AM
Last Updated : 06 Jul 2022 06:35 AM

பெர்லின் | ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றார் உக்ரைன் கணித மேதை

பெர்லின்: கணிதத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் பதக்கத்தை உக்ரைன் கணித மேதை மேரினா வியாசோவ்ஸ்கா வென்றுள்ளார்.

கணித பாடத்தில் மிக உயர்ந்த விருதான ஃபீல்ட்ஸ் பதக்கம், 40 வயதுக்கு உட்பட்ட கணித மேதைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. தற்போது இந்த பதக்கம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மேரினா வியாசோவ்ஸ்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் உள்ள சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப மையத்தில் எண் கோட்பாடு பிரிவுக்கு தலைமைவகிக்கிறார். ‘எட்டு பரிமாணங்களில் ஒரே மாதிரியான கோளங்களின் அடர்வு’ என்பது குறித்து இவர் மேற்கொண்ட பணிக்காக ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படுகிறது என சர்வதேச கணித யூனியன் கூறியுள்ளது.

இவர் தவிர ஜெனிவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிரான்ஸ் கணித மேதை ஹூகோ டுமினில்-கோபின், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொரிய - அமெரிக்கன் கணித மேதை ஜூன் ஹூ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இங்கிலாந்து கணித மேதை ஜேம்ஸ் மேனார்டு ஆகியோருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றியாளர்கள் வழக்கமாக ரஷ்யாவில் உள்ள சர்வதேச கணித காங்கிரஸ் அமைப்பில் அறிவிக்கப்படுவர். ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக இந்தாண்டு பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் ஃபீல்ட்ஸ் பதக்கம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக சர்வதேச கணித அமைப்பின் தலைவர் கார்லஸ் இ.கெனிக் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x