உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிக்க அனுமதி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிக்க அனுமதி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்களை இந்தியாவில் படிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் பிரவாசி சட்டப்பிரிவு என்ற பெயரில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள மாணவர்களாகிய நாங்கள் தற்போது இந்தியா திரும்பியிருக்கிறோம். எங்களை தற்போது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க எந்த விதிமுறைகளும் நடைமுறையில் இல்லை. மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, போரால் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள நாங்கள் எந்த நிலையில் படிப்பை தவறவிட்டோமோ, அதேநிலையில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும். போரை முன்னிட்டு அப்படிப்பட்ட சிறப்பு அனுமதியை வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள வாழ்வுரிமை, நீதி, சமத்துவம், சம உரிமையைக் காப்பதோடு மட்டுமின்றி, மக்களின் நலன்காக்கும் அரசு என்ற இந்தியாவின் அடிப்படைக் கொள்கையையும் பாதுகாப்பதாக அமையும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுமீது ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், உக்ரைனில் இருந்து படிப்பு பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் பயனடைவர் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in