Last Updated : 07 Dec, 2021 03:07 AM

 

Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் இடஒதுக்கீடு எதிரொலி; கோவை அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்த 29,351 மாணவர்கள்: தனியார் பள்ளிகளில் சேரும் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக சரிவு

கோவை

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளா தார பாதிப்பு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்ற போதும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவை கடந்த ஓராண்டாக பெற்றோரின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள் ளன.

இதனால், கோவையில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளைவிடவும் நடப்பாண்டு அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கடந்த 2019-20-ம் கல்வியாண்டைவிட நடப்பாண்டு 40,916 மாணவர்கள் குறைவாக சேர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.கீதா கூறும்போது, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, மடிக்கணினி, காலணிகள், புத்தகப் பை, நோட்டுப்புத்தகங்கள், பாடநூல்கள், மிதிவண்டி, பேருந்துப் பயண அட்டை, சத்துணவு ஆகியவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. இதுதவிர, மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக் கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இடஒதுக்கீட் டின்கீழ் வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குதான் முதலில் மருத்துவ படிப்புக்கான கவுன் சிலிங் நடைபெறுகிறது. அவர்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

அதேபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்றதொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நடப்பாண்டு முதல் 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதுபோன்று இடஒதுக்கீட்டின் கீழ் முன்னணி கல்வி நிறுவனங் களில் பயின்று, பணிக்கு செல்லும்போது அவர்களின் வாழ்க்கைத்தரமே மாறி விடும் என்பதால், பெற்றோர் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோரும், உயர்கல்விக்கு அரசு கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தை சேருவதையே விரும்புகின்றனர். அந்த வாய்ப்பு இடஒதுக்கீட்டின்கீழ் வரும் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதனால், கோவை அரசுப் பள்ளிகளில் கடந்த 2019-20-ம் கல்வியாண்டைவிட நடப்பாண்டு எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை கூடுதலாக 29,351 மாணவர்கள் சேர்ந்துள்ள னர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தரத்தில் கூடுதல் கவனம் தேவை

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சந்திரசேகர் கூறும்போது, “பல அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1-ல் கலைப் பாடப்பிரிவுகள் இல்லை. இதனால், பத்தாம் வகுப்போடு மாணவர்கள் படிப்பை நிறுத்தும் சூழல் உள்ளது.

மேலும், குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல பள்ளிகளில் தூய்மையான கழிப்பிடம், குடிநீர் வசதி, நாப்கின் எரிக்க இன்சுலேட்டர் இயந்திரம் போன்றவை இல்லை. இதனால், மாணவிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, பள்ளியின் தேவைக் கேற்ப பாடப்பிரிவுகள், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், வளாகத்தை தூய்மையாக வைத் திருக்க பணியாளர்கள் இருக்க வேண்டும்.

பள்ளிகளின் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதிலும், அவற்றின் பராமரிப்பிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவை உறுதிசெய்யப்பட்டால் சலுகைகளைப் பார்த்து மட்டு மல்லாமல், தரமான ஆசிரியர்கள், போதிய கட்டமைப்பு வசதி ஆகியவற்றை பார்த்தும் மாணவர் களை சேர்ப்பது அதிகரிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x