

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2019-ம் ஆண்டு எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அங்கு பணிக்காலம் முடியும் முன்னரே அவர்திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பல்கலைக் கழகத்தின் நிர்வாக பணிகளை தற்போது ஒருங்கிணைப்பு குழுவினர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தற்போது தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி (ஆளுநர் உறுப்பினர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர்கள் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து ஆகியோர் தேடல் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3 பேர் கொண்ட பட்டியல்
இந்த குழு, ஒரு மாத காலத்துக்குள் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேடல் குழு ஒருங் கிணைப்பாளராக நியமிக்கப்பட் டுள்ள பாலகுருசாமி, நீட், நவோதயா பள்ளிகள், புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.