

நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 439 மதிப்பெண்களைப் பெற்று, போரூர் அரசுப் பள்ளி மாணவி ரசிகா மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த நவ.1-ம் தேதி வெளியாகின. இதில் சென்னையை அடுத்த போரூர் அரசுப் பள்ளியில் படித்த மாணவி எஸ்.ரசிகா, தனது முதல் முயற்சியிலேயே 439 மதிப்பெண் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் (அரசுப்பள்ளி பிரிவு) முதலிடம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக மாணவி எஸ்.ரசிகா கூறும்போது, “நீட் தேர்வில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளி மாணவர்கள் ஊக்கமுடன் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். பயிற்சி மையங்களின் உதவி தேவையில்லை. எனது தந்தை லேத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார். மாணவி ரசிகாவுக்கு கல்வித் துறை அதிகாரிகள், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.