Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்றுமுதல் திறப்பு: இனிப்புகள் கொடுத்து குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடு

1 முதல் 8-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் கண்ணூர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை வரவேற்க தோரணம், வாழை மரம் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று (நவ.1)முதல் திறக்கப்பட உள்ளன. சுமார்20 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பும் குழந்தைகளை இனிப்புகள் கொடுத்து வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது.

இதனிடையே, வைரஸ் தொற்றுபரவல் குறைந்து வருவதையடுத்து,ஊரடங்களில் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து துறைகளும் முழுமையாக இயங்கஅனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8 வரையான வகுப்புகளுக்கு நவ.1-ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்என தமிழக அரசு அறிவித்தது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநிலம் முழுவதும்1 முதல் 8 வரையான வகுப்புக மாணவர்களுக்கு இன்று (நவ.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை வரவேற்கும் விதமாக சிலபள்ளிகளில் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே 9 முதல் 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கடந்தஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில மாதங்கள் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால், 1 முதல்8-ம் வகுப்பு மாணவர்கள் சுமார்20 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் பள்ளிக்கு திரும்ப உள்ளனர்.

அதனால், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே எங்களின் முதல் இலக்கு. பள்ளிக்கு வரும் குழந்தைகளை பூங்கொத்து, இனிப்பு, பொம்மைகள் தந்து வரவேற்பது உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீண்டகால இடைவெளியால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கு முதல் 15 நாட்கள் கதைகள் பேசுதல் உள்ளிட்ட மனமகிழ்ச்சி குறித்த செயல்பாடுகள் மட்டுமே பள்ளிகளில் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் 2 மாதங்கள் வரைபுத்தாக்க பயிற்சிகளை வழங்கப்படும். மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, பள்ளி வளாகத்தில் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பன உட்பட அறிவுறுத்தல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும்,பெற்றோர் தங்கள் விருப்பத்தின்படியே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிகள் திறப்பதையொட்டி பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீண்டஇடைவெளிக்கு பிறகு பள்ளிகள்திறக்கப்படுவதால் அனைத்துமாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை இயக்குநர்களும், இணை இயக்குநர்களும் கண்காணிப்பதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறுதலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்விஇயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வெடிக்காத பட்டாசுகளை பரிசோதனை செய்யக்கூடாது, உரிய பாதுகாப்புடன் பட்டாசு வெடித்தல், கண்ணாடி பாட்டில்கள், கைகளில் வைத்தபடி வெடிப்பதை தவிர்ப்பது பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் பண்டிகைக்கு முன்னதாக மாணவர்களிடையே கொண்டுசெல்ல பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x