Last Updated : 25 Oct, 2021 07:55 PM

 

Published : 25 Oct 2021 07:55 PM
Last Updated : 25 Oct 2021 07:55 PM

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்குத் தன்னார்வலர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு

தஞ்சாவூர்

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்குக் கூடுதல் தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும் இன்னும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாகக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால், கற்றல் இடைவெளி மிக அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

''ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்கிற வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

சிலர் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என ஆலோசனை கூறினர். பள்ளிக்கூடங்களை நாங்கள் திறக்கிறோம். இதன் மூலம் குழந்தைகளுக்குக் காலையில் இத்தனை மணிக்கு எழுந்திருப்பது, சீருடை அணிவது, பள்ளிக்குச் செல்வது போன்ற நன்னடத்தைகள் ஏற்படும். அதற்காகவும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தற்போது கரோனா காலமாக இருப்பதால், பள்ளிக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்றும், வந்தால்தான் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் எனவும் சொல்ல முடியாது. யார், யார் விருப்பப்படுகிறார்களோ, அவர்கள் நவம்பர் 1 -ம் தேதி முதல் குழந்தைகளை அனுப்பி வைக்கலாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். தீபாவளி கழித்தும் பள்ளிக்கு வரலாம். நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

கடந்த இரு ஆண்டுகளாகக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால், கற்றல் இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் எப்படி பென்சிலைப் பிடித்து எழுதவோ, எழுத்துக் கூட்டிப் படிக்கவோ செய்யப் போகின்றனர் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் விதமாக ’இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை முதல்வர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

இத்திட்டத்துக்கு 1.70 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். இதுவரை 50,000 பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பொதுவான இடத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் மாலை நேரத்தில் வகுப்பு எடுப்பார். இத்திட்டம் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும். இதை முறையாகத் தமிழக முதல்வர் இரண்டொரு நாட்களில் அறிவிப்பார்.''

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பின்னர் கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் தொடக்கப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x