Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; மாணவர்கள் தங்கள் தேவைக்கேற்ப நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பது அவசியம்: மத்திய அறிவியல், பொறியியல் ஆய்வு வாரியச் செயலர் அறிவுரை

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்குகிறார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.சேதுராமன்.

தஞ்சாவூர்

மாணவர்கள் தேவைக்கேற்ப தங்கள் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என மத்தியஅரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு வாரியச் செயலர் சந்தீப் வர்மா அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 35-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாநேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஆர்.சேதுராமன் தலைமை வகித்தார். துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், முதன்மையர் (திட்டம்மற்றும் மேம்பாடு) எஸ்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், இணையவழியில் பங்கேற்ற மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு வாரியச் செயலர் சந்தீப் வர்மா பேசியதாவது:

மாணவர்கள் தேவைக்கேற்பதங்கள் நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பது அவசியம். அளவு சமூக அறிவியல் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்மூலம் கணக்கீட்டுத் துறையில் மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் சமூக அறிவியல் தரவைப் பயன்படுத்தி சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். சைபர் இயற்பியல் அமைப்புகள் என்ற மற்றொரு திட்டத்தின் மூலம் உடல்நலம், சட்டம் மற்றும் சமூகநீதி, ஆற்றல்,சுற்றுச்சூழல், நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், 54 முனைவர் பட்டதாரிகள் உட்பட ஏறத்தாழ 4,500 மாணவர்களுக்கு இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்த பி.டெக். மாணவருக்கான சுவாமி செல்வமுத்துக்குமரன் விருது மின்னணு, கணினிபொறியியல் துறை மாணவி ஐஸ்வர்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒட்டுமொத்த சிறப்பிடத்துக்கான காமகோடி விருதையும், வெள்ளி விழா ஆண்டில் படித்த சிறந்த மாணவிக்கான விருதையும் பெற்றார்.

மேலும், சி.பி.தேஜஸ்வினி மற்றும் பி.தீபக்கு முறையே நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி விருது, நானி பல்கிவாலா விருது (தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு) வழங்கப்பட்டன. சிறந்த முனைவர் பட்டஆய்வறிக்கைக்கான நிறுவன வேந்தர் விருது ரம்யா தண்டபாணி, பி.முத்துக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x