Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM

சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆசிரியர்களுக்கு பூஜ்ய இடமாறுதல்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை

மாங்காடு

சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆசிரியர்களுக்கு பூஜ்ய இடமாறுதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது.

தற்போது அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் நவ.1-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தித் தர வேண்டுகிறோம்.

‘புதிய கொள்கைகள் அறிவிக்கப்படும்’

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொதுமாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்களுக்கு நடத்தவும், தற்போது சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆசிரியர்களுக்கு பூஜ்ய இடமாறுதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டுகிறோம்.

“ஒரே பள்ளியில் 10 ஆண்டு, 20 ஆண்டு பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வகுக்கப்பட்டு கலந்தாய்வின்போது தெரிவிப்பார்” என்ற கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நடைமுறையில் உள்ள ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வர் ஆணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x