புதுச்சேரி, காரைக்காலில் நவ.8 முதல் 1 முதல் 8-ம் வகுப்புகள் திறப்பு?- விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் நவ.8 முதல் 1 முதல் 8-ம் வகுப்புகள் திறப்பு?- விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளை வரும் நவம்பர் 8-ம் தேதி முதல் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுவையில் கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. பொதுத்தேர்வு உட்பட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாகப் புதுவையில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறைச் செயலாளர் அசோக்குமார், இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோருடன் தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். புதுவையில் பள்ளிகளைத் திறக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுபற்றிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "பள்ளிகள் திறப்பு பற்றி ஆலோசித்தோம். நவம்பர் முதல் வாரத்தில் புதுவை விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வருகின்றன. அதனால் நவம்பர் 8-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பள்ளிகள் திறப்புக்காக கரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in