Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

புரொகிராமிங், டேட்டா சயின்ஸ் பாடங்களில் ஐஐடியில் ஆன்லைன் டிப்ளமோ படிப்புகள் அறிமுகம்: நவ.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை

புரொகிராமிங், டேட்டா சயின்ஸ் பாடங்களில் புதிதாக 2 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பணியாற்றுவோர் பயன்பெறும் வகையில் டிப்ளமோ இன்புரொகிராமிங், டிப்ளமோ இன் டேட்டா சயின்ஸ் ஆகிய 2 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இது 8 மாதப் படிப்பாகும். இதில் சேர இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் பின்புலம் அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் சேரலாம்.

இதில் சேர விரும்புவோர் https://diploma.iitm.ac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நவம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு டிசம்பர் 12-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த புதிய படிப்புகளின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சகஸ்ரபுதே இணைய வழியில் பங்கேற்று, இந்த 2 டிப்ளமோ படிப்புகளையும் தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் டேட்டா சயின்ஸ், புரொகிராமிங் துறையில் உரிய பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவு தேவைப்படுகின்றனர். அதை கருத்தில் கொண்டு இப்படிப்புகளை சென்னை ஐஐடி தொடங்கியது பாராட்டுக்குரியது. மாணவர்களும், பணியில் உள்ளவர்களும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

திறமைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டி மிகுந்த சூழலை எதிர்கொள்ள முடியும். புரொகிராமிங், டேட்டா சயின்ஸ் துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இப்படிப்புகள் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும்’’ என்றார்.

சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும்போது, ‘‘ஆன்லைன் வழியில் பாடம் நடத்தப்படுவதும், நேரடியாக மதிப்பீட்டு முறை இருப்பதும் இப்படிப்பின் தரத்தை உறுதிசெய்யும். புரொகிராமிங், டேட்டா சயின்ஸ் துறையில் நுழைய விரும்புவோருக்கு இப்படிப்புகள் பெரிதும் உதவும்’’ என்றார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் திருமலா அரோஹி பேசியபோது, ‘‘கல்விக்கு எல்லையே இல்லை.வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தை மாணவர்களும், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர் தரத்திலான நேரடி வகுப்புகள், நேரடி பயிற்சி,புராஜெக்ட் வசதி என சிறந்த முறையில் இப்படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x