பிரகதி இலவசப் பெண் கல்வி திட்டம்: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரகதி இலவசப் பெண் கல்வி திட்டம்: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

பிரகதி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2021-22ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசித் தேதியாகும்.

பொறியியல் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ சார்பில் பிரகதி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரகதி உதவித்தொகைக்கு முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்குக்கூட பிரகதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அரசு வழங்கிய வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமின்றி, ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறுபவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரகதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாணவியின் ஆதார் எண், கல்லூரிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30 நவம்பர் 2021

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2010_G.pdf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

பிரகதி திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in