Published : 20 Sep 2021 01:13 PM
Last Updated : 20 Sep 2021 01:13 PM

7.5% இட ஒதுக்கீடு; பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்தக் கலந்தாய்வில் இன்று (செப். 20ஆம் தேதி) தமிழக முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆணையை வழங்கினார். அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

’’அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆணைகளைப் பெறுவதற்காக இங்கு வந்திருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பொறியல் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற உங்களது கனவு நிறைவேறும் நாள் இது!

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கு இடம் கிடைக்குமா? அதுவும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்புவரை உங்களுக்கு இருந்திருக்கும். அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள்தான் இந்த நாள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்றால் அதற்காக உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு எல்லாம் சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களை இந்தப் பதினேழு வயது வரைக்கும் படிக்க வைக்க உங்கள் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்களது நம்பிக்கையைக் காப்பவர்களாக நீங்கள் உங்களை இன்னும் சிறப்பாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நாட்டின் முதல்வராக மட்டுமல்ல, அன்புச் சகோதரனாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிக் காலத்தில் இருந்து கல்லூரிக் காலத்துக்குள் நுழைகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறீர்கள். சிறந்த வேலைவாய்ப்பை நீங்கள் பெற வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமல்ல, வேலை கொடுப்பவர்களாகவும் உயர வேண்டும். அதற்காக உங்களை முழுமையான திறமைசாலிகளாக, பன்முக ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும். தொழிற்கல்வி என்பதைப் பட்டம் பெறும் கல்வியாக மட்டும் கருதாதீர்கள். உங்களது தொழில் அறிவைக் கூர்மையாக்கவும் அதைப் பயன்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள்தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு

* பொறியியல்,
* வேளாண்மை,
* கால்நடை மருத்துவம்,
* மீன்வளம்,
*சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5% இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அரசால் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது.

நடப்புக் கல்வி ஆண்டில், இந்த சிறப்பு உள் ஒதுக்கீட்டு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10,000 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டப் படிப்புகளிலும் பயன்பெறுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ளும்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x